Friday, February 9, 2018

அடி மாட்டுச் சந்தை.


     பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு மாடுகளின் சராசரி ஆயுசுக் கணக்கில் ஆறேழு தலைக்கட்டு கடந்துவிட்டது. வியாழக் கிழமைகளில் கூடும் அந்தச் சந்தைக்கு வந்து கூடும் மாடுகளுக்கு ஆயுசு  அதிகமில்லை.!
     அனேகமாக ஆயுசுக்கு பங்கம் வந்துவிட்ட அடிமாடுகள் மட்டுமே வந்து கூடுகின்றன. சந்தைக்கு வரும் கறவை மாடுகளையும் வேலை மாடுகளையும் வளர்ப்புக் கன்றுகளையும் நம்பி வாங்கமுடியாத தந்திரத்தில் வர்த்தகர்கள் செயலாற்றியிருப்பார்கள் !
     எட்டணா வாடகைக்கு வாடகை சைக்கிள் கிடைத்த கால கட்டத்தில், எங்களூர் அய்யாவு கடையில் அரை வண்டி எடுத்துக் கொண்டு… சோட்டியாட்களுடன் புதன் கிழமைகளின் காலைப் பொழுதில் திருச்சியிலிருந்து வடமதுரை வழியாக பழனி நோக்கிச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வந்து காத்து நிற்போம்…!
     கும்பல் கும்பலாக சாலையை நிறைத்துக்கொண்டு மாடுகள் மந்தை மந்தையாக பொள்ளாச்சியிருக்கும் திக்கு நோக்கி வரும்.
     மாடுகள் கூலிக்கு ஓட்டிக்கொண்டு வருபவன் ஒரு கையில் சோறு தண்ணியடங்கிய தூக்குப் பையுடனும் ஒரு கையில் குச்சியே இல்லாத சாட்டையுடனும் மிகுந்த எச்சரிக்கையுடன் மாடுகளை விரட்டிக்கொண்டே வருவான்.
     ஒரு கும்பல் மாடுகளுக்கும் மறு கும்பல் மாடுகளுக்கும் ஒன்றோ இரண்டோ மைல் தூரம் இடைவெளியிருக்கும். மாடுகளை ஓட்டி நடப்பவன். இடையிடையே சாட்டையை சுழட்டிஉஅடிக்கும் ஓசை பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் மிரளிக்கையாக இருக்கலாம். கால் நோக பலகாத தூரம் கடந்து வந்த மாடுகளுக்கு அடிவாங்கி மழுங்கிப் போயிருக்கும்.
     லாடம் போடாத பல மாடுகள் கால் தாங்கிக் கொண்டே தார் ரோட்டில் கால் வைக்க இயலாமல் ரோட்டை ஒட்டிய மண் பரப்பில் நடந்து வர எத்தனிக்கும். லாடம் கழன்ற சில மாடுகளுக்கு லாட ஆணி மறுபக்கக் காலை எட்டுக்கு ஒரு முறை இடித்து இடித்து ரணமாக்கி கொண்டே வரும்.!
     நெல் நடவுக்கு சேத்து உழவடிக்க லாடமடிக்காத மாடுகளை சேத்துக்குள் இறக்கினால் உச்சிப் பொழுதுக்குள் குளம்பின் மையப் பகுதி ரணமாகிப் போயிருக்கும். நான்கைந்து மைல் தார் ரோட்டில் லாடமில்லாத மாடுகள் நடந்தாலே குளம்பு தேய்ந்து ரத்தம் கசியும். எட்டு வைக்க முடியாத வண்டி மாடுகள் கால் தாங்கும்.
     அடிமாட்டுக்காக சந்தைக்கு வரும் மாடுகளுக்கு பண்டுதம் பார்க்க வர்த்தகனுக்கு எண்ணமில்லை. கால் நோவு கண்டு பின் தங்கும் மாடுகளுக்கு சாட்டையடிதான் சடுதியில் கிடைக்கும்.
     கூடு கொம்பு ; விரிந்த கொம்பு ; ரம்பாடிக் கொம்பு ; சரிந்த நீண்ட கொம்பு ; கட்டைக் கொம்பு ; குட்டைக் கொம்பு மாடுகளும்…. கொம்பேயில்லாத மோளை மாடுகளும் கண்ணுக்குள் உயிராக சரம் சரமாக சாலயில் செல்வதை வேதனை மிகுந்த மனத்துடன் பார்த்துத்  திரும்புவோம்.
     வயது முதிர்ந்த மாடுகளுக்கு நிகராக வயது குறைந்த சபிக்கப்பட்டதாக் கருதப்படும் கொட்டு மாடுகளும் ; சுழி மாடுகளும் : நோவு  கண்ட மாடுகளும் கசாப்புக்காச் செல்வதுண்டு.
     ஈனாத கொட்டு மாடுகளும் ; பாய்ச்சல் மாடுகளும் : சுழி மாடுகளும் மனிதர்கள் கண்களுக்கு ஈனப்பிறவிகளாகத் தெரிபவைகள் ! மனிதர்களில் திருநங்கைகளுக்கு இருக்கும் மதிப்பீடுதான் மாட்டு வர்கத்தில் குறைவுள்ள மாடுகளுக்கும்.
     கொம்பில்லாத மோளை மாடுகளைப் பார்க்கும் போது அதிசயமாகத் தெரியும். கொம்பு முளைக்காமலிருக்க கொழுவை பழுக்கக் காய்ச்சி கொம்பு வளர வளர வைப்பார்களாம்!   கொம்பின் முனை கருகி அப்படியே அமர்ந்து போவதாகச் சொல்கிறார்கள்.!
     தீமை தரும் சுழி அமைந்திருக்கும் மாடுகளுக்கும் அச்சுழியை அழிக்க இரும்புக் கம்பியைக் காய்ச்சி  சுழிமேல் வைப்பார்களாம். சுழி அழிந்துபோவதுடன் அவ்விடத்தில் சொட்டை விழுந்திருக்கும். அனுபவப்பட்டவர்கள் சுழியழித்ததை சுலபத்தில் கண்டுவிடுவதுண்டு.
     சுழிகளில் நன்மைபயக்கும் சுழியும் தீமை தரும் சுழிகளும் உள்ளது என்பதை மாடுகள் அறிந்திருக்க நாயமில்லை. ஆனால் நற்சுழி அமையப்பெற்ற மாடுகள் போற்றி வளர்ப்பதாகவும், தீய சுழியுள்ள மாடுகளை வேண்டா வெறுப்பாக வளர்ப்பதையும் பார்த்திருக்கிறோம்.!
     முன் நெற்றியில் ஒரு சுழி பொட்டு வைத்தது போலிருந்தால் அது ‘ராஜ சுழி’ அதை வளர்ப்பவன் ராஜாவைப் போல் வாழ்வானாம்!
     பொடனியில் ஒரு சுழி பிரகாசமாகயிருந்தால் அது ‘உபராஜ சுழி’ அப்பபடிப்பட்ட சுழி அமையப்பெற்ற மாடுகளை வளர்ப்பவனும் சர்வசெழிப்புடன் காலம் தள்ளுவானாம்.
     நடு முதுகில் முதுகின் நேர் கோட்டில் சுழி அமையப்பெற்றிருந்தால் அது ‘ மந்திரி சுழி’ அம்மாடுகளை வளர்ப்பவனுக்கும் ராஜ வாழ்வுண்டு!
     முன் இரண்டு கால்களிலும் முழங்காலுக்கு மேல் சப்பையில் சுழி அமையப்பெற்றிருந்தால் அது ‘ அசைவு சுழி’ மாடு நடக்க நடக்க சுழியும் அசையும்; அப்படிப்பட்ட மாடுகளை வளர்ப்பவனின் குடும்பமும் அசைவு காணும். அசைவு சுழி நல்லதல்ல.
     நடு முதுகிற்கும் பின்புறமாக ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சுழிகளிருந்தால் அது ‘ பாடைச் சுழி’! பாடைச் சுழியுள்ள மாடு பண்ணைக்கு ஆகாது. எசமானர் வீட்டில் யாராவது பாடையேறுவார்களாம்.!
     கொம்புகளுக்கு நடுவில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சுழியிருந்தால் அது ‘ குடைமேல் குடை’ தீமை தரக் கூடியது ! அதுவே சமமாக கொம்புகளுக்கு நடுவில் இரண்டு சுழிகளிருந்தால் அது ‘ தராசு’! அப்படிப்பட்ட சுழியால் நன்மையோ, தீமையோ இல்லை !
     வாலில் சுழியிருந்தால் அது ‘ வால் சுழி’! அச்சுழியுள்ள மாடுகளை வளர்ப்பவர்கள் வாழ்வில் முன்னேற்றமிருக்காது.!
     பொடனியில் ஒன்றன்பின் ஒன்றாக சுழி அமைந்திருந்தால் அது ‘ பொடனி  விலங்கு’ அம்மாடுகளை வளர்க்கும் எசமானுக்கு சிறைவாசம் அமையும்.!
     கழுத்தின் இருபுறமும் ஒண்ணு சொன்னது போல் சுழி அமைந்திந்தால் அது “தாமணி சுழி” அச்சுழிதான் அபூர்வமான சுழி.! ஆயிரத்தில் ஒரு மாட்டுக்குத்தான் அமைந்திருக்கும்.! அம்மாடுகள் இருக்கும் தொழுவத்தில் மாடுகள் மந்தை மந்தையாகக் கூடும். இச்சுழி நாட்டு மாடுகளுக்கு மட்டுமே இருக்கும். சீமை மாடுகளுக்கு இருக்காது.
     எங்களிடமிருந்த காங்கேயம் வம்சத்தைச் சார்ந்த பசு ஆனந்த வருசத்தில் (1075) ஒரு காளங் கன்றை ஈன்றது. அக்கன்றிற்கு பாடைச் சுழியிருப்பதாக கண்ணாளிகள் பலரும் சொன்னார்கள். அக்காலகட்டத்தில் நாட்டு மாடு காளங் கன்று ஈன்றுவிட்டால் வீட்டில் ஆம்பளப் புள்ளை பிறந்தது போல மகிழ்ந்து போவார்கள்.
     பண்ணையில் காளங் கன்று பிறந்ததற்காக சந்தோசமிருந்தாலும் பாடைச் சுழியுடன் பிறந்துவிட்டதற்காக காலப் போக்கில் தெரியத் தெரியத் தெரிய வருத்தமாகவுமிருந்தது ! வாரத்தில் ஒரு நபராவது வந்து பாடைச் சுழியைப் பற்றி பல கதைகள் சொல்லி அச்சமூட்டிவிட்டுப் போனார்கள்.
     பாடைச் சுழியுள்ள மாட்டை வாங்கித்தான் வளர்த்தலாகாது ! பண்ணையிலேயே பிறந்தால் வளர்த்துவதில் தப்பில்லை என்று இறுதியில் தீர்மானம் கிடைத்தது. வாழத பெண்பிள்ளை தாயோடு என்பதுபோல ! பண்ணையிலேயே அக்கன்று வளர்ந்தது.
     கன்று காளையாக வளர்ந்தபோது நடை பழக்கினோம். நடை பழக்கப்பட்ட மாடு வண்டியில் பூட்டினால் சன்ன ஓட்டத்திற்கு நிகராக வெரசாக நீண்ட எட்டு வைக்கும். ஓடினால் மூச்சு வாங்கி வாயில் நுரை வடியும். குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் ஓட முடியாமல் நடை பழகாத மாடுகள் துவண்டு போகும்.
      நீண்ட எட்டு வைக்கும் நீளத்தில் முன்னங்கால் இரண்டையும் கழுதைக்கு அன்னாங்கால் போடுவதைப் போல இணைத்துக் கட்டிவிட்டு… மாட்டை வெரசாக விரட்டி ஓட்ட வேண்டும். முன்னங்கால் இணைக்கப் பட்டதால் ஓட இயலாமல் வெரசாக எட்டு வைத்து நடக்கும். பல நாட்கள் தொடர் பயிற்சியால் மாடு ஓட்டத்தை மறந்து நடை பழகியிருக்கும்.
     சாதுவான மாடுகளைவிட சுழி மாடுகளும் உழை பாய்ச்சல் புத்தியுள்ள மாடுகளும் பலசாலிகளாகவும் சுற்சுறுப்பு, மிகுதியான வைகளாகவும் காணப்படும்.
     எங்களது அந்த சுழிக்காளை வளர வளர பாய்ச்சலையும் கற்றுக்கொண்டது. தொடக்கத்தில் விளையாட்டாக பழக்கப்பட்டவர்களைத் துரத்தியது… காலப்போக்கில் கொடூரமான பாய்ச்சல் மாடாக மாறிவிட்டிருந்தது.
     என்னை இரண்டு மூன்று முறை மேய்ச்சல் காட்டில் முட்டித் தள்ளியிருக்கிறது. சட்டை, டவுசர் கிழிந்ததுடன் வேறு சேதாரம் ஏற்படவில்லை. பாடைச் சுழி என்ற குறையைத் தவிர பாய்ச்சல் மாடு என்ற தகாத செயலைத் தவிர வேலையில் பூட்டினால் உடம்பில் ஒரு துரும்புபடவிடாது. இணை மாட்டின் பாரத்தையும் சேர்த்து இழுக்கும் வல்லமை கொண்டிருந்தது.!
     அதன் அசாத்தியமான திறமையின் காரணமாக அதன் இரண்டு பல் பருவத்தில் தன் கூட நிறுத்தி கறுப்பு வெள்ளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் எனது தந்தையார். அந்தப் புகைபடம் இன்றளவும் எமது வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. வருடங்கள் பல கடந்திருந்தாலும் அந்தக் காளையின் மிடுக்கு இன்றளவும் பிரதிபலிக்கின்றது.
     கட்டுத்தரையிலும் பண்ணையிலும் பாய்ச்சல் குணமுள்ள மாடுகள் சில சந்தைக்குப் போய் நின்றால் முட்டாது. சக மாடுகளைக் கண்டோ புதுயிடத்தைக் கண்டோ கெட்ட குணத்தை ஒத்திவைத்துவிடுகின்றன. அதே சமயம் பாய்ச்சல் குணமேயில்லாத சில மாடுகள் கும்பலைக் கண்டதும் புத்துணர்வு வந்ததுபோல் முட்டவரும்.
     அனேகமாக கண் சிறுத்து கண்ணைச் சுற்றியுள்ள மேடு சதைப்பிடிப்பாகவுமுள்ள சதைக்கண் மாடுகள் முட்டும். அதேபோல் செங்கண் மாடுகளும் ஆக்ரோசமாகப் பாயவரும்.
     இரண்டு கொம்பும் வட்டமாக வளர்ந்து ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டால் அதை வளர்க்கும் குடும்பம் நசியும் !
     எங்கள் பண்ணையில் பிறந்த பாடைச் சுழியுள்ள காளை பதினாங்கு வருடம் கடும் பாடுபட்டது. வயது கூடக்கூட மனிதனுக்கு மந்த புத்தி வருவது போல் அந்த எருதுக்கும் வந்துவிட்டது. குறிப்பிட்ட ஓரிரு நபர்களைத் தவிர வேறு யாரும் அவிழ்த்துப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த எருதுக்கு மிடுக்காகத் தெரிந்த பாய்ச்சல் குணம்தான் பலவீனமாகிவிட்டிருந்தது. குறிப்பிட வாடிக்கையாகப் பிடிக்ககூடிய நபர்கள் வெளியூர் போய்விட்ட சமயத்தில் அன்னந்தண்ணியின்றி அவதிப்பட்டது.
     தூரத்திலிருந்து வீசும் தீவனமும் வாளியில் குச்சியைக் கட்டி எட்ட நின்று வைக்கும் தண்ணியும் அதற்கு போதுமானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
     ஆனந்த வருசம் 1975 இல் பிறந்த அந்தக் கன்று எருதாகி வயதாகி பிரபவ வருசம் 1987 இல் ஏறத்தாழ தமிழ் வருட கணக்கின்படி பதினாங்காவது வயதில் அறநூறு ரூபாய்க்கு அடிமாட்டுக்காரனுக்கு விற்கப்பட்டது. அதன்பின் எந்த மாடும் எங்களுக்கு அமையவில்லை.
     மனசே வராமலும் அதே சமயம் கட்டிக்காக்க இயலாமலும் அந்த எருது விற்கப்பட்டிருந்தாலும் பண்ணையில் வெகு நாட்கள் யார் முகத்திலும் செழுமையில்லை. அந்த எருது கட்டப்பட்டிருந்த கட்டுத் தரையில் இன்றளவும் யாதொரு மாடும் அதற்கு நிகராக வாய்க்கவில்லை.!
     பாடைச் சுழியென்று பிறந்த சில மாதங்களிலேயே கசாப்புக் காரனுக்கு விற்கப்பட்டிருந்தால் அதன் நஷ்டம் அதற்கல்ல. எங்களுக்காக வண்டியும் கலப்பையும் இழுத்த அதன் உழைப்பு இன்றளவும் ஆவணமாக எஞ்சியிருக்கின்றன.
     மாடுகளுக்குத் தெரியுமா சுழி சுத்தம். நமக்கு நல்ல சுழி இல்லை என்றாலும் நமது புள்ளைகளின் ஜாதகத்தில் தீய கிரகங்கள் மோசமான நிலையில் அமையப் பெற்றிருந்தாலும் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி புள்ளைகளுக்கு சூடு போட்டுவிடுவோமா…! அல்லது அதன் காரணமாக யிருந்தவர்களை கசாப்புக்காரனுக்கு விற்று விடுவோமா….!
     எங்களிடம் அந்த பாடைச் சுழியுடன் பிறந்த மாடு இருந்த காலத்தில் முப்போகம் விளைந்தது ! அது உழைத்த காலத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன வீட்டில் தானிய மூட்டைகள். அதற்கு அத்தாட்சியாக அந்த மாட்டின் புகைப்படத்தை மாட்டுப் பொங்கலன்று பூஜித்து வருகிறோம்.
     தாய் தகப்பனைப் போல மாடுகளும் இருக்கும்போது பாரமாகத் தோன்றினாலும் இல்லாத போதுதான் அதன் அருமை புரியும் ! நமது சுழி சரியாக அமையப் பெற்றிருந்தால் எந்தச் சுழியுள்ள மாடுகளாலும் நமக்குத் தீங்கு வராது !
     எருதையும் பசுவையும் போற்றக்கூடிய பண்ணையக்காரர் குடிகாரராகவும் வேறு குடி நாடுபவனாகவும் சூதாடியாகவும் அமையப் பெற்றிருந்தால் மட்டுமே பண்ணை காலப்போக்கில் நிர்மூலமாகுமே தவிர, எந்த ஒரு பண்ணையிலும் வாக்கப்பட்டுப்போன மாடுகளின் சுழியால் பண்ணை அழிவதில்லை.!    
     தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமில்லாமல், சாமியார்களையும் எலுமிச்சம் பழத்தையும் ஜாதகத்தையுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை.!
     மருத்துவமனைகளுக்கு நிகராக ; ஆலயங்களுக்கு நிகராக ; சாமியார்களையும் ஜோதிட நிலையங்களையுமே நம்பி விடியக் கருக்கலில் வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள் தினந்தினமும் கூடிக்கொண்டே வருகிறார்கள்.!
     மேலே குறிப்பிட்ட பொள்ளாச்சி அடிமாட்டுச் சந்தைக்கு குறைந்த வயதே ஆன மலட்டு மாடுகளும் சுழி மாடுகளும் பாய்ச்சல் மாடுகளும் வாரம் தவறாமல் வந்து குவிந்து கொண்டேயிருக்கின்றன.
     அம்மாடுகள் முக்கால்வாசி கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காக வாங்கிச் செல்லப்படுகின்றன. மலட்டு எருமை மாடுகளை மலட்டுத் தன்மை நீக்கி கன்று ஈன வைக்கும் மருத்துவச் சேவையை தமிழக அரசு கொண்டுவரப் போவதாக அறிவித்திருகிறார்கள்.
     அதனால் பல ஆயிரக்கணக்கான குறைந்த வயதே ஆன கால் நடைகள் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும்.! பால் உற்பத்தியும் கன்று எண்ணிக்கையும் காலப்போக்கில் கூடும் என்பதில் ஐயமில்லை.
     சுழி என்றும் மலடு என்றும் கால்நடைகளை கசாப்புக்கு குறைந்த வயதிலேயே அனுப்புவதைத் தவிர்ப்போம் ! இயந்திர சக்தியைவிட மனித சக்தியும் மனித சக்தியைவிட கால்நடைகளின் உழைப்பும் அலாதியானது.! மாடுகளை நம்பி மட்டுமே பண்ணையடித்த போது தமிழகத்தில் முப்போகம் விளைந்ததை யாராலும் மறுப்பதற்கில்லை. மரத்தையழித்து மாடுகளை ஒழித்து பூமியையும் கூடாரமாக்குவதால் மாடுகளுக்கோ பூமிக்கோ இல்லை நஷ்டம்.!
   

படித்ததில் பிடித்தது : உயிரெழுத்து மாத இதழில். நாவல் : குமாரகேசன்.



No comments:

Post a Comment