Saturday, August 10, 2013

இறைவன் கொடுத்த தண்டனை அல்ல...!

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...!

திண்டிவனம் அருகேயுள்ள பரங்கணி என்ற கிராமத்தில் இரண்டரை வயதுள்ள ஒரு குழந்தைக்கு தானாகவே உடலில் தீப்பற்றி எரியக்கூடிய நோய் இருக்கிறது. இதைக்கண்ட கிராமத்தார் அந்தக் குடும்பத்தை தெய்வகுற்றம் என்று கூறி ஊரைவிட்டு ஒதுக்கியுள்ளனர். இப்போது அந்தக் குழந்தை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அந்தக் குழந்தைக்கு இருப்பது spontaneous human combustion எனப்படும் தானாகவே உடலில் தீப்பற்றும் விநோத நோயாகும். இதுவரை உலகில் 200 பேருக்கு மட்டுமே அந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு அறிவியல் அறிஞர்களான ஜோ நிக்கல் மற்றும் ஜான் பிரஷர் என்பவர்கள் இதுபற்றிய விரிவான விளக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள்.

பொதுவாக மனித உடல் தீப்பற்றி எரிவதற்கு 3000*செல்சியஸ் வெப்பம் தேவை. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் மிகக் குறைவான வெப்பநிலையிலேயே அதாவது மெழுகுவர்த்தி எரிதல் சமையல் அடுப்பு பக்கத்தில் இருக்கும்போது கூட தீப்பற்ற வாய்ப்புண்டு. இப்போது அந்தக்குழந்தை கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதை எதற்காக இங்கு பதிகிறேன் என்றால் , இந்த நோயை விட்டுவிடுங்கள் இதைவிட சாதாரண நோய்களையெல்லாம் நம் கிராம மக்கள் கடவுள் பெயரைக்கூறியும் மூடநம்பிக்கையோடும் அணுகுகின்றனர். என் அனுபவத்தை இங்கே கொஞ்சம் ஜல்லியடிக்கிறேன்.

2007-08 காலகட்டங்களில் நான் சங்கர நேத்ராலயா சார்பாக தமிழகமெங்கும் உள்ள கிராமங்களில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது திண்டுக்கல் அருகேயுள்ள செம்பட்டி எனும் ஊரில் ஒரு 8 வயது சிறுமியை என்னிடம் அழைத்து வந்திருந்தார் அந்தச் சிறுமியின் அம்மா. அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிரச்சினை என்றால் வலது கண்ணில் பார்க்கும்போது பார்க்கும் காட்சியில் சிகப்பு நிற புள்ளி /வட்டம் போன்ற ஒன்று தெரிகிறது. அவளுக்கு அந்தப் பிரச்சினை சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இருக்கிறது. ஏன் இத்தனை நாட்களாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து போகவில்லை என்று கேட்டபோது "முதலில் அவள் சும்மா சொல்கிறாள் என்று நினைத்திருக்கிறார்கள். பிறகு சாமி ஒளி தெரிகிறது என்று சொல்லி விட்டுவிட்டார்கள்" என்று தெரியவந்தது.

அந்தப் பெண்ணின் பார்வையை பரிசோதித்து பார்த்ததில் அவளுக்கு இரண்டு கண்ணிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. விஷன் 6/6p இருக்கிறது. எனக்கும் கூட அவள் பொய்தான் சொல்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது. சரி கம்ப்ளீட்டாக பரிசோதனை செய்வோம் என்று கண்களில் டையலேட் ட்ராப்ஸ் போட்டு கண்ணின் பாப்பாவை விரிவடையச்செய்து அதன்பிறகு ரெட்டினா காமிராவினால் இரண்டு கண்ணின் ரெட்டினாக்களையும் படம் பிடித்துப் பார்த்தேன். வலது கண்ணின் ரெட்டினாவிலுள்ள மேக்குலா எனப்படும் மையப்பகுதியில் சிறிய அளவில் ஒரு இரத்தக்கசிவு இருந்தது தெரிந்தது. நான் சிகப்பு புள்ளி தெரிவதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். ஆனால் ஏன் 8 வயது சிறுமிக்கு கண்ணில் இரத்தக்கசிவு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் எல்லா மெடிக்கல் தொடர்பான படங்களையும் சென்னையிலுள்ள சங்கர நேத்ராலயா விற்கு அனுப்பி அந்தப் பெண்ணை டெலி கான்பரன்சிங்கில் டாக்டர் சுசித்ரா பிரதீப் அவர்களுடன் கன்சல்டிங்கிற்கு ஏற்பாடு செய்தேன். டாக்டரும் மேக்குலாவில் ஏற்பட்ட ரத்தக்கசிவினால் தான் சிகப்பு புள்ளி தெரிவதாக சொன்னார். ஏன் இது ஏற்பட்டுள்ளது டாக்டர் என்று கேட்டேன். டாக்டர் அந்தப்பெண் தலைகீழாக நின்று யோகாசனம் போன்ற ஏதாவது செய்கிறாளா கேளுங்கள் என்றார். பெண்ணின் அம்மாவிடம் கேட்டால் இல்லையென்று சொன்னார். தவிர கண்ணில் எந்த அடியும் பட்டதில்லை.

பிறகு டாக்டர் அந்தப் பெண் மோஷன் ஃப்ரீயாக போகிறாளா இல்லை ரொம்பக் கஷ்டப்பட்டு முக்கி முக்கி போகிறாளா கேளுங்கள் என்றார். நான் கேட்டவுடன் பெண்ணின் அம்மாவும் "ஆமாம். அவள் சுலபமாக டாய்லெட் போவதில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு முக்கி முக்கித்தான் போவாள். அதற்காக தினமும் வாழைப்பழம் கூட தருகிறோம் " என்றார். உடனே டாக்டர் "சிவா ...! தலைகீழாக நிற்பது போன்ற செயலில் ஈடுபடுவர்கள் , தலையில் அதிக பாரம் சுமப்பவர்கள் , இதுபோல ரொம்ப சிரமப்பட்டு மோஷன் போகிறவர்கள் இவர்களுக்கு கூட அதிகப்படியான ஸ்ட்ரெய்னினால் ரெட்டினாவில் சிறிய அளவில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது " என்றார். அதன்பிறகு அந்தப் பிரச்சினைக்கு மிக எளிய வைத்திய முறைகளை சொன்னார். அடுத்த மாதம் அந்த ஊருக்கு சென்று அந்தப் பெண்ணை ஃபாலோஅப் செய்ததில் அவளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. மீண்டும் ஒருமுறை கண்களின் ரெட்டினாவை படம் பிடித்து பார்த்ததில் அந்த இரத்தக்கசிவு மறைந்திருந்தது.

இதை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால் இது ஒரு சாதாரண பிரச்சினை தான். ஆனால் அவர்கள் இதை மூட நம்பிக்கையில் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் இதுவே சீரியஸான பிரச்சினையாகி இருக்கும். ஆகவே எந்தவொரு உடல் சம்பந்தமான பிரச்சினைகளையும் நீங்கள் கடவுள் கொடுத்த தண்டனை என்றோ வேறு ஏதோ மூட நம்பிக்கைகளைக் கொண்டு அர்த்தம் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

நன்றி - சிவசங்கரன் சரவணன்.

No comments:

Post a Comment