Sunday, September 9, 2012

ஆவாரம் பூ









ஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன்,இனிமையான தமிழ்ப்பாடல்.

ஆனால் நாம் போகும் பாதைகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூ ஆவாரம் பூ என்பதை எத்தனை பேர் அறிவோம்?

தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.

செடி முழுக்க மருத்துவப்பயன் உடையது. பூவை தண்ணீரில் காய்ச்சியோ அல்லது பாலில் கொதிக்க வைத்தோ சாப்பிட்டு வந்தால் உடல் நாற்றம் ,உடலில் உப்பு பூத்தல், நா வறட்சி ஆகியன நீங்கும்.

இதன் விதை சூரணம்,உடலுக்கு வலு கொடுக்கும்,காமம் தூண்டும். முழுச்செடியின் சூரணம் நீரிழிவு(சர்க்கரை நோய்) உடல் மெலிவு ,எரிச்சல் ,உடல் பலகீனம்,மயக்கம்,மூச்சுத்திணறல் ஆகியவற்றை போக்கும்.

இதன் பட்டையை பொடி செய்து வைத்துக்கொண்டு தண்ணீரில் இட்டு சுண்டக்காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் நீரிழிவு,சிறு நீர்க்கோளாறுகள்,தாக வறட்சி ஆகியவை தீரும்.

நாட்டு மருந்து கடைகளில் சீயக்காய் பொடி தயாரிக்க மூலிகைகள் வாங்கும்போது அதில் ஆவாரம் பூவும் இடம்பெறும்.அரைத்து தேய்த்து குளித்தபிறகு ஒரு புத்துணர்வு கிடைக்கும் பாருங்க அது எந்த சோப்பிலும் கிடைக்காது.

ஆவாரம் பூ பூத்துக் குலுங்கும் காலங்களில் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அப்படியே வண்டியை ஓரம் கட்டி பை நிறைய பறிச்சுடுவேன்.வீட்டில் சாம்பார்,காரக்குழம்பு எல்லாவற்றிலும் இந்த பூவை வதக்கி சேர்த்து விடுவார்கள்.

அதேபோல் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்வேன், தேநீர்,காஃபிக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்க நினைக்கும் போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவேன்,சமயங்களில் பாலுடனும் சேர்த்துக்கொள்வேன்.வாசனை அருமையாக இருக்கும்,சுவையாகவும் கூட இருக்கும்.இதே போன்று தாமரை இதழ்களையும் பொடி செய்து பயன்படுத்துவதுண்டு.

எனக்கு புரியாத ஒரு விஷயம் இந்த ஆவாரம் பூ,தாமரை பொடியில் தயாரிக்கப்படும் தேநீர் நல்ல சுவையும்,மணமும் இருந்தும் தமிழர் வாழ்வில் இருந்து விலகிப்போனது ஏனோ? இத்தனைக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் அருமருந்து இது.

எனக்கு ஆவாரம் பூவின் நினைவு வந்து விட்டது, பறிக்க பையை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன், நீங்க?????????????????????????? ரெடியா????????

No comments:

Post a Comment