Sunday, April 21, 2013

குறைந்த செலவில் குளிர் சாதனம்.

“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள்!
நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்“ - என்று பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டனர் வீட்டில்.

எனக்கோ ஏ.சி.வைப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை.
உங்கள் முன் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா?
அப்படியானால் இதைப்படிக்கவும்.

ஏ.சி. வைத்தால், ஓர் அறையை இறுகப்பூட்டிக்கொண்டு, சுவாசித்த காற்றையே சுவாசித்துக்கொண்டு, நாளில்பாதியை கழிக்கவேண்டும்.  
அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மை அடிமைசெய்து விடும்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டால், அதிலிருந்து மீளவே முடியாமல் போயிவிடும்.

மேலும், கடுமையான மின்வெட்டு,  
அப்போது என்ன செய்வது?
ஏ.சி.வைத்திருக்கும் நண்பர்களிடம் விளக்கம் கேட்டேன்.  
ஏ.சி.போட்டிருந்தாலும், மின்வெட்டானதும் மின்விசிறியைப் போட்டுக்கொள்வோம். புழுக்கம் தெரியாது, அதற்குள் மின்சாரம் மீண்டும் வந்துவிடும் என்றனர்.

எப்படியிருந்தாலும், ஏ.சி. வாங்க எனக்குச் சிறிதும் விருப்பமேமில்லை.

இருந்தாலும், மாயமானைச் சீதைபொருட்டு ஸ்ரீராமன் பிடிக்கச் சென்றான்.
பார்போற்றும் பரந்தாமனே அப்படிச்செய்துள்ளான்.  
நாமும் நம் மன்னன் காட்டிய வழியில் நடப்பதுதானே நல்லது.
ஏ.சி. வாங்கினால் இல்லம் குளிர்ச்சியாகிறதோ இல்லையோ, இல்லாள் மனம் குளிர்ச்சியாகிவிடும்.

ஆயிரம்தான் இருந்தாலும் எனக்கு மனம் இல்லை.
இயற்கையோடு இசைந்து வாழ வழிதேடியது என்மனம்.
இதற்காகப் பலகோணங்களில் யோசித்தேன்.
கடைசியாக ஒருவழி மனதில் உதித்தது.

1984 ஆம் ஆண்டு மதுரையில் (ரீகல் தியேட்டர் அருகில் உள்ள) ‘ராஜா ரேடியோஸ்‘ என்ற கடைக்கு மதிய நேரம் சென்றிருந்தேன்.  அந்தக் கடையில் ஏ.சி. இல்லை. ஆனாலும் அவ்வளவு வெயிலிலும் புழுக்கமாக இல்லை. 
இதற்குக் காரணம் என்ன என்று முதலாளியிடம் கேட்டேன்?

அவர் கடையின் வாயில் அருகே இருந்த வெண்டிலேட்டர் மின்விசிறியைக்( ventilator fan) காண்பித்தார்.  அந்த மின்விசிறி, கடையில் இருக்கும் வெப்பக்காற்றை வெளியே அனுப்புவதற்குப் பதிலாக, வெளியே உள்ள காற்றை கடைக்குள் அனுப்பும் வகையில் மாற்றி மாட்டிவைக்கப்பட்டிருந்தது.  எனக்குச் சற்று வியப்பாக இருந்தது.
 
 
கடைமுதலாளி ஒருசிறு விளக்கம் அளித்தார்.
“மதியம் 3மணி வரை வெளியில் வெயில் கடுமையாக இருக்கும்.  
பின்னர் சிறிது காற்று வீச ஆரம்பித்துவிடும்.  இதனால் கடைக்குவெளியே வெப்பம் குறைந்துவிடும்.  ஆனால் கடைக்கு உள்ளே புழுக்கமாக இருக்கும்.
எனவே மின்விசிறியை மாற்றியமைத்து, வெளியே உள்ள காற்றைக் கடைக்குள் திருப்பிவிட்டுள்ளேன்.  இதனால் கடைக்குள் புழுக்கமாக இருக்காது“ என்றார்.

முதலாளியின் இந்தத் தொழில்நுட்பத்தை நாமும் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது.

காரைக்குடியில் கடைக்குச் சென்று ஒரு எக்சாஸ்ட்விசிறி வாங்கினேன்.  மின்விசிறி ரூபாய்.1150-00. வயர் ரூபாய்.35-00, சுவிட்சு ரூபாய்.20-00. (மொத்தம் 1205-00) செலவு வந்தது.

வீட்டில் கொண்டு வந்து மாட்டினேன்.
இரவு நேரம் ஆரம்பித்தவுடன், இந்த விசிறியைப் போட்டுவிட்டேன்.
அருமையாக வேலை செய்கிறது.
 

1 comment:

  1. if you add a filter with it ,you will get nice air.then should be cautious about outside air pollution means carbon monoxide.

    ReplyDelete